முழு நாடுமே ஒன்றாக ; ஒரே நாளில் 632 பேர் போதைப்பொருட்களுடன் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், ஞாயிற்றுக்கிழமை (19) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 632 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற ஒருவரும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 05 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனைகள்
இதேவேளை, 654 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், ஒருவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 332 கிராம் ஹெரோயின், 473 கிராம் ஐஸ், 10 கிலோகிராம் 349 கிராம் கஞ்சா, 6,984 கஞ்சா செடிகள், 06 கிலோகிராம் 401 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 24 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 592 போதை மாத்திரைகள், 112 கிராம் மதனமோதகம் மற்றும் 74 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.