6000 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் கைது
மொரட்டுவ விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய, இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், சட்டவிரோதமாக பாரவூர்திகளில் எடுத்துச் செல்லப்பட்ட பெருந்தொகையான மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹொரவப்பொத்தானை பிரதேசத்திலிருந்து மாட்டிறைச்சியை சட்டவிரோதமான முறையில் பாரவூர்திகள் மூலம் கொழும்புக்கு எடுத்துச்செல்லப்படுவதாக விசேட அதிரடிப்படையின் உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதற்கமைய, சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த விசேட நடவடிக்கைக்குழு, கம்பஹாவிலிருந்து குறித்த பாரவூர்தியை பின்தொடர்ந்த அதிரடிப்படையினர், தெஹிவளை பிரதேசத்தில் வைத்து குறித்த பாரவூர்தியை சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது, கொல்லப்பட்ட மாடுகளிலிருந்து பெறப்பட்ட சுமார் 40 தலைகள் குறித்த பாரவூர்தியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக விசேட அதிரடிப்டையினர் தெரிவித்துள்ளனர். பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவை மனித பாவனைக்கு உகந்தவையல்ல என கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட மாட்டிறைச்சியின் நிறை சுமார் 6000 கிலோ என்றும் இவற்றின் சந்தைப்பெறுமதி சுமார் 60 இலட்சம் ரூபா என்றும் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதுடன், இறைச்சிகளை கொண்டுசென்ற பாரவூர்தியையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நடவடிக்கைகளுக்காக பாரவூர்தியுடன் சந்தேகநபர்கள் இருவரும் தெஹிவளை காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.