யாழ். நெடுந்தீவு கடற்கரையில் சிக்கிய 6 மர்ம மூடைகள்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு (Delft Island) வெள்ளைக் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் பெருமளவிலான வெளிநாட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
வட கடற்படை கட்டளைத் தளத்தின் கீழ் செயல்படும் SLNS வசப முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் நேற்று(24) மேற்கொண்ட விசேட ரோந்துப் பணியின் போதே இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வெள்ளைக் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் கைவிடப்பட்டிருந்த ஆறு சாக்கு மூடைகளை சோதனையிட்ட கடற்படையினர், அவற்றிலிருந்து 500 பாக்கெட் வெளிநாட்டுச் சிகரெட்டுகள், 2,295 பாக்கெட் கிருமிநாசினிகள், 2,569 மருத்துவ களிம்புகள், 165 அழகுசாதனக் கிரீம்கள் மற்றும் 64 வாசனைத் திரவியப் போத்தல்களை மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.