வெளிநாட்டு மருந்து பெயரில் 6 கோடி ரூபாய் மோசடி ; போலி பெண் மருத்துவர் கைது
மேற்கத்தேய மற்றும் ஆயுர்வேத மருத்துவர் எனப் போலியாக நடித்து, பொதுமக்களிடம் சுமார் 6 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரை ஹொரண பிராந்திய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அண்மைக்காலமாக ஹொரண பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியொன்றில் வசித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் படி, சந்தேகநபர் நீண்டகாலமாக இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மக்களின் நம்பிக்கையைப் பெறும் நோக்கில் வாடகைக்கு சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தியதுடன், அவற்றில் மருத்துவ இலச்சினைகளை காட்சிப்படுத்தி பல்வேறு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தியுள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து விசேட மருந்துகளை இறக்குமதி செய்து நோயாளிகளுக்கு வழங்குவதாகக் கூறி அவர்களின் நம்பிக்கையை வென்றுள்ளார்.
எனினும், அவர் வழங்கிய மருந்துகள் இலங்கையில் பயன்பாட்டிற்கு அங்கீகாரம் பெறாத தரமற்ற மருந்துகள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து மருந்து கொள்கலன்கள் துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும், அவற்றை விடுவிக்க பணம் தேவைப்படுவதாகவும் கூறி பலரிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவ்வாறு சுமார் 6 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கம்பஹா, மதுராவல, மில்லனிய, பண்டாரகம, ஹொரண மற்றும் இங்கிரிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமன்றி, சில விகாரைகளின் தலைமைத் தேரர்களும் இந்த மோசடிக்கு இலக்காகியுள்ளதாக புகார்கள் கிடைத்துள்ளன.
சந்தேகநபரின் மருத்துவத் தகைமைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் எந்தவொரு மருத்துவ அல்லது ஆயுர்வேத மருத்துவச் சபையிலும் பதிவு செய்யப்படாதவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவரது பெயரில் இரண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மோசடி செய்யப்பட்ட பணம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.