போதைப்பொருட்களுடன் யாத்திரை மேற்கொண்ட 592 பேர் கைது!
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களில் ஹட்டன் வழியாக பல்வேறு போதைப்பொருட்களுடன் யாத்திரை மேற்கொண்ட 592 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஹட்டன் வலயத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் அவர்களிடமிருந்து 60 இலட்சத்து 29 ஆயிரத்து 324 ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலிய, நல்லதண்ணி, பொல்பிட்டிய, வட்டவளை மற்றும் கினிகத்தேனை ஆகிய காவல்நிலையங்களின் அதிகாரிகள் மற்றும் ஹட்டன் பிராந்திய மோசடி ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனைகளில் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என ஹட்டன் வலயத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடையும் வரை இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.