50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் நடத்தப்பட்ட கொலை ; விசாரணையில் வெளிவந்த தகவல்
மாத்தறை – தேவேந்திரமுனை இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலை 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி, T-56 ரக துப்பாக்கியும் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, சம்பவ இடத்திலிருந்து குறித்த கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்தன.
50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தம்
இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு மாத்தறை பதில் நீதவான் நேற்று பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இக் கொலை சம்பவத்துக்காக இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த மோதலின் விளைவாக தேவேந்திரமுனை விஷ்ணு ஆலயத்துக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.