காவிரி தாயை மலர் தூவி வணங்கி மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!
தமிழ் நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணை வான் கதவுகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (01) திறந்து வைத்தார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய், என். ஆனந்த் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்கள் முன்னிலையில், வான் கதவுகளை திறப்பதற்கான பொத்தானை இயக்கி, வெளியேறிய காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி நீர்திறப்பைத் தொடங்கி வைத்தார்.

காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி வழிபட்ட முதல்வர் விஜய்
டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க மேட்டூர் அணையை, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் திறந்து வைப்பது இதுவே முதல் முறையாகும்.
விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் அடையாளமாகக் கருதப்படும் பச்சை நிறத் துண்டை அணிந்திருந்த அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
நீர்த்தேக்கப் பகுதிக்குச் செல்லும் வழியில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்து அவர் தனது பயணத்தை மேற்கொண்ட நிலையில் பல இடங்களில் மக்கள் அவர் மீது மலர்களைத் தூவி வரவேற்றனர்.