வவுனியாவில் இருந்து பிரான்சுக்கு தப்பிச் சென்ற கொரோனா நோயாளிகள்!
வவுனியாவில் இருந்து கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்னரே 5 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தவசிகுளம் பகுதியில் திருமணம் ஒன்றிக்காக பிரான்ஸில் இருந்து 6 பேர் வருகை தந்திருந்தனர். அவர்கள் மீளவும் வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணம் ஆசிரியர் கல்லூரியில் பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்திருந்தனர்.
அவர்களது பிசிஆர் முடிவுகள் நேற்று முன் தினம் இரவு (19) வெளியாகிய நிலையில் குறித்த 6 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுகாதாரப் பிரிவினர் குறித்த 5 பேரையும் தனிமைப்படுத்த சென்ற போது அவர்கள் மீண்டும் பிரான்ஸ் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிசீஆர் முடிவு வருவதற்கு முன்னர் குறித்த 6 பேரும் வீட்டில் இருந்து வெளியேறி வெளிநாடு சென்றுள்ளதாகவும், அதில் 5 பேர் கொரோனா தொற்றுடனேயே வவுனியாவில் இருந்து சென்றுள்ளதாகவும் சுகாதரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த நபர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், குறித்த தொற்றாளர்கள் தொற்றுடன் எவ்வாறு வெளிநாடு சென்றார்கள் என்பது குறித்தும் சுகாதாரப் பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடு சென்றவர்கள் நீர்கொழும்பில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, அதில் எதிர்மறை பெறுபேற்று சான்றிதழை பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.