இலங்கை வந்த 05 சீன வர்த்தகர்கள் அதிரடி கைது ; சட்டவிரோத செயல் அம்பலம்
சுமார் 83 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 5 சீன நாட்டு வர்த்தகர்கள் இன்று (16) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின், கிரீன் சேனல் ஊடாக இந்த சிகரெட் தொகையை கடத்திச் செல்ல முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
இன்றறையதினம் முற்பகல் 11.15 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஏர் ஏஷியா நிறுவனத்திற்குச் சொந்தமான OD-297 என்ற விமானம் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 05 பயணப் பொதிகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 55,400 சிகரெட்டுகளைக் கொண்ட 277 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்களை சுங்கக் காவலில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.