வெளிநாடுகளில் 4794 இலங்கையர் உயிரிழப்பு ; வெளியான திடுக்கிடும் தகவல்
கடந்த 14 வருடங்களில் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு சென்ற 4794 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 3179 ஆண்களும் 1615 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3242 பேர் இயற்கை மரணம் எய்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பணியகம் தகவல்
அதோடு கைத்தொழில் மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற விபத்துகளால் 428 பேரும், வீதி விபத்துக்களால் 446 பேரும் உயிரிழந்துள்ளதுடன், 377 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 61 இலங்கையர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் கொழும்பு, காலி, கம்பஹா, கண்டி, களுத்துறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2010 ஜனவரி முதல் 2024 டிசம்பர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் சென்று நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த 72,718 பேர் இலங்கைத் தூதரகங்களுக்குச் சொந்தமான பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியா, குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பு இல்லங்களில் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டு, பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.