4 வயதுச் சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்பு
தென் மாகாணத்தின் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (20) நிகழ்ந்த இந்தச் சோகச் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை மற்றும் மரண விசாரணையில், டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சலால் ஏற்பட்ட சிக்கல்களே மரணத்திற்கு பிரதான காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை 2026 ஆம் ஆண்டில் இதுவரை நாடளாவிய ரீதியில் 78,125 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , டெங்கு காய்ச்சலால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் 21,355 ஆக இருந்த பாதிப்பு, ஜூலை மாதத்தில் இதுவரை 22,749 ஆக உயர்ந்து மிகத் தீவிரமடைந்துள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 2,652 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். நாட்டின் 162 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிதீவிர அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.