தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல், இன்று (15) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று (15) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார். அதன்பின்னர் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றவர்கள் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூக செயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.
மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை தொடர்ந்து, நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்