இலங்கையில் பறிபோகும் நிலையில் 37 தமிழர்களின் கிராமங்கள்!
மகாவலி அதிகார சபையின் செயற்பாடு தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் Charles Nirmalanathan கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழர்களின் இனப்பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப்பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால தந்திரமான செயற்பாடு தான் மகாவலி அதிகார சபையின் செயற்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கண்டனம் வெளியிட்டிருந்தார்.
தற்பொழுது மகாவலி “J”வலயம் என்ற ஒன்றை புதிதாக உருவாக்குவதற்காக முல்லைத்தீவு - துனுக்காய் பிரதேச செயளாலர் பிரிவில் இருக்கின்ற 7 கிராம அலுவலர் பிரிவுகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் இருக்கின்ற 15 கிராம அலுவலர்கள் பிரிவுகளும்,
மன்னாரில் இருக்கின்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 15 கிராம அலுவலர் பிரிவுகளும் உள்ளடங்களாக மொத்தம் 37 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி மகாவலி அதிகார சபை புதிய வர்தமானி அறிவித்தல் செய்வதற்காக பிரதேச செயலகங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே இவ் விடயத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பிரேரனை ஒன்றை முன் வைத்திருப்பதாகவும் அதற்கு நீர்ப்பாசன அமைச்சர் எதிர்வரும் சபை அமர்வின் போது பதில் அளிப்பதாக கூறியிருப்பதாக சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
மகாவலி “L”வலயம் முல்லைதீவில் 1988 ஆம் ஆண்டு வர்தமானி அறிவுத்தல் ஊடாக நிர்ணயம் செய்யப்பட்டது இன்றைக்கு 35 ஆண்டுகள் கடந்தும் மகா வலி தண்ணீர் இன்னும் வரவில்லை என்றும் சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகாவலி தண்ணீர் அங்கு வராமல் இருக்கிறபோது அங்கு புதிய சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டு சிங்கள மக்களும் குடியேற்றப்பட்டு மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மகாவலி“J” வலயம் மகாவலி அதிகார சபையினால் வர்தமானி பிரசுரம் செய்யப்பட்டால் வெகுஜன போராட்டத்தின் ஊடாகவும் மக்கள் போராட்டத்தின் ஊடாகவும் முழுமையாக முல்லைத்தீவு மன்னார் மக்கள் இணைந்து இந்த திட்டத்தைய் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சாள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.