Wi-Fi சேவையை இணைப்பதாக கூறி 36 மில்லியன் மோசடி
தனியார் நிறுவனமொன்றிற்கு Wi-Fi சேவையை இணைப்பதாக கூறி 36 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த இரண்டு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக, நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 மற்றும் 37 வயதுடையவர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்குளி மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 34 மற்றும் 37 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
சந்தேக நபர்கள் நேற்று (24) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.