சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 33 பேர் கைது
கடற்படையினரால் கடந்த சில நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளின் மூலம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகங்களினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

சட்ட நடவடிக்கை
இதன்போது 18 டிங்கிப் படகுகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை இலக்கந்தை, நிலாவெளி, கல்குடா, கொக்குத்தொடுவாய், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உள்ளிட்ட பல கரையோர மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் கடற்படையினரால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி, மூதூர், முல்லைத்தீவு, கொக்கிலாய், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களிலும், கல்குடா மற்றும் நிலாவெளி பொலிஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.