துரத்தி கொட்டிய குளவிகள்; பாடசாலை அதிபர் உட்பட 30 பேர் மருத்துவமனையில்
பொலன்னறுவை திம்புலாகல, லீலாரத்ன விஜேசிங்க மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் குழுவொன்றின் மீது இன்று (4) காலை குளவிகள் கலைந்து தாக்கியதில், பாடசாலை அதிபர் உட்பட சுமார் 30 பேர் அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற, அரலகங்வில பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவர் தலைவர் பதவியேற்பு விழா
லீலாரத்ன விஜேசிங்க மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான ‘மாணவர் தலைவர்’ பதவியேற்பு மற்றும் சின்னம் சூட்டும் விழா வியாழக்கிழமை(04) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, இத்துயர சம்பவத்தின் காரணமாக அவ்விழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் கட்டடமொன்றின் உட்பகுதியில் சில குளவிக்கூடுகள் இருந்துள்ளதாகவும், அவை திடீரெனக் கலைந்து வந்து தாக்கியதாலேயே மாணவர்கள் இக்குளவித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
சம்பவம் குறித்து பாடசாலை அதிபரால் உடனடியாகப் பொலிஸாருக்கும், அரலகங்வில விசேட அதிரடிப்படையினருக்கும் (STF) தகவல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து குளவிக்கொட்டுக்கு இலக்காகிப் பாதிக்கப்பட்ட மாணவர்களை விரைவாக மீட்டு, அரலகங்வில மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.