கொழும்பு முன்னணி பாடசாலையில் 3 மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியைகளுக்கு எச்சரிக்கை
கொழும்பின் முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் 3 மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், இன்று (22) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்டது.
ஒக்டோபர் 04 ஆம் திகதி பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால், மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆசிரியைகளுக்கு அதிபர் எச்சரிக்கை
அது குறித்து அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்ற இரு ஆசிரியர்கள் அதிபரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் , சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.
முறைப்பாடளிப்பதற்கு முயன்றபோது பெற்றோர்களிடம், பிள்ளைகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்குமெனவும்,வழக்கு பல ஆண்டுகள் நீளும் என்றும் கூறப்பட்டதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
சம்பவத்திற்குக் எதிராக பாடசாலைக்கு முன் போராட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், விடயம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இதன்போது எதிர்கட்சி தலைவருக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விடயம் குறித்து காவல்துறையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் கூறினார்.