மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்தை மீளமைக்க மேலும் 3 நாட்கள்!
இணையவழி சைபர் தாக்குதலுக்கு உள்ளான மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முழுமையாக மீளமைக்க மேலும் மூன்று நாட்கள் தேவைப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற விமானப்படை எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தச் சைபர் தாக்குதல் காரணமாக நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும் சேவைகளுக்கான திகதி மற்றும் நேரங்களை முன்பதிவு செய்யும் செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்படும் தகவல்களைப் பார்வையிடுவதில் மாத்திரமே தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தை மீளமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் மூன்று நாட்களுக்குள் அதனை வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.