தமிழக முகாமிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி; தாயகம் திரும்ப ஆசைப்பட்ட யாழ் குடும்பம் சிறையிலடைப்பு!
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற மூன்று இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தமிழர்கள் 300 இற்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்று தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தை, தாய், மகள்
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர்.
மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பலமுறை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் மனு அளித்தனர்.
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததால் அவர்களை திருப்பி அனுப்ப முடியவில்லை.
இந்நிலையில் மண்டபம் சிறுவர் பூங்காவில் உள்ள விநாயகர் கோவிலில் அருகே தெற்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று இலங்கை தமிழர்களை கியூ பிரிவு பொலிஸார் நேற்று மாலை (27) பிடித்து விசாரணை நடத்தினர்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் (வயது 48) அவரது மனைவி ராஜினி (வயது 47) இவர்களது மகள் திபேந்தினி (வயது 20) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு தப்பி செல்ல காத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
படகில் இலங்கை அனுப்புவதற்கு உதவியாக டீசல் மற்றும் பேக்குடன் நின்று கொண்டிருந்த மண்டபம் எருமை தரவை பகுதியை சேர்ந்த இலங்கையர்கள் மூவர் என மொத்தம் ஆறு பேரையும் கைது செய்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த மண்டபம் பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்