தந்தையின் இறுதிச்சடங்குக்கு வர மறுத்த 3 மகள்கள் ; வைரலாகும் சமூக வலைத்தள விவாதம்
மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி தொழிலதிபர் ஒருவர், ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவரின் மூன்று மகள்களும் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவதாகவும், தந்தையின் இறுதிச்சடங்கில் நேரடியாகக் கலந்துகொள்ள அவர்கள் மறுத்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தூரம் காரணமாக இறுதிச்சடங்கில் நேரில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், இறுதிச்சடங்கிற்காக ரூ.5,100 பணத்தை இணையவழியாக அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தந்தையின் இறுதிச்சடங்கை அவர்கள் காணொளி அழைப்பு மூலம் பார்த்ததாகவும் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இறுதிச்சடங்குக்குப் பின்னர் தந்தையின் அஸ்தியைக் கூட மகள்கள் பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், மகள்களின் நடவடிக்கை குறித்து இணையவாசிகள் பலரும் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.
பெற்றோரின் இறுதி தருணங்களில் பிள்ளைகளின் பொறுப்பு என்ன என்பது தொடர்பிலும், தூரம் உள்ளிட்ட காரணங்களால் இறுதிச்சடங்கில் நேரடியாகப் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் மற்றும் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஒரு பெற்றோரின் இறுதிச்சடங்கில் கூட பிள்ளைகள் நேரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் குடும்பத்தினரின் தரப்பு குறித்த தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.