மின்னஞ்சல்களால் பறிபோன 3 கோடி ரூபா பணம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மின்னஞ்சல்களை அனுப்பி, முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (5) உத்தரவிட்டார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

துரிதகதியில் விசாரணை
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றில் இது குறித்து விடயங்களை முன்வைக்கையில், இணையம் ஊடாக பொதுமக்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி, அதன் மூலம் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வதன் ஊடாக அதிக இலாபம் ஈட்ட முடியும் என நம்பவைத்து இந்த பாரிய மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
தற்போதைய விசாரணைகளின்படி, அப்பாவி மக்களை ஏமாற்றி இதுவரை 2 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறை அதிகாரிகள், மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.
வழக்கை ஆராய்ந்த பிரதான நீதவான், இந்தச் சம்பவம் தொடர்பில் துரிதகதியில் விசாரணைகளை நிறைவு செய்து, அதன் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பணிப்புரை விடுத்தார்.