290 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்...தலைமறைவான பொப் மாலி
290 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் விவகாரத்தில் பிரதான சந்தேக நபரான பொப் மாலி தலைமறைவாகியுள்ளார்.
தேசிய உளவுச் சேவையின் தகவலுக்கு அமைய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவும் கடற்படையினரும் இணைந்து பேருவளைக்கு அப்பால் உள்ள ஆழ் கடலில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போது, படகொன்றில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டுக் கொண்டிருந்த 290 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி மிக்க 288 கிலோ 644 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த போதைப்பொருளை நாட்டுக்குள் தருவித்ததாக கூறப்படும் பிரதான சந்தேக நபரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். தலாஹேன – மாலபே மற்றும் உடுமுல்ல – பத்தரமுல்லை ஆகிய முகவரிகளை கொண்ட 41 வயதான ‘ பொப் மாலி ‘ என அறியப்படும் களுதுரு சமிந்த தாப்றூ என்பவரே இந்த விவகாரத்தில் உள்ள உள்நாட்டு பிரதான சந்தேக நபர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. எவ்வாறாயினும் குறித்த சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில் அவரைக் கைது செய்ய பொலிஸார் பொது மக்களினது உதவியையும் நாடியுள்ளனர்.
அதன்படி 198017101618 மற்றும் 801711618 V ஆகிய அடையாள அட்டை இலக்கங்களை உடைய குறித்த சந்தேக நபரின் புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கிய பொலிஸ் தலைமையகம், அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் உதவிப் பணிப்பாளரின் 071 -8592727 எனும் கையடக்கத் தொலைபேசிக்கோ அல்லது 011 -23433334 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ உடனடியாக அறிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த போதைப் பொருள் விவகாரத்தில் ஏற்கனவே அஹுங்கல்லை, பலபிட்டிய மற்றும் ஹபராதுவை பகுதிகளைச் சேர்ந்த 31 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்ட ஐவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு பெறப்பட்ட 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.