நிலச்சரிவுகளில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ; வெளியான புதிய தகவல்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 ஆம் திகதி முதல் இன்று (27) வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் நாடு முழுவதும் நிலச்சரிவுகளில் சிக்குண்டு குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கை
காலை நிலவரப்படி நாடு முழுவதும் 170 நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தலைமையிலான அவசர கூட்டமொன்று தற்போது இடம்பெற்றுவருவதாகவும் அவர் உறுதிபடுத்தினார்.
குறித்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் உயரதிகாரிகள் என பலர் கலந்துகொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நிலைமையை சீர்செய்வதற்காக முன்ஏற்பாடுகள், பொலிஸாரின் செயற்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.