25,000 ரூபா; இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வழங்கல்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக வழங்கப்படும் 25,000 ரூபா ஆரம்பக்கட்டக் கொடுப்பனவு, இதுவரை 2 இலட்சத்து 57 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகையில்,

4,93,000 குடும்பங்கள் தகுதி
நாட்டில் டித்வா சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கினால் நாடளாவிய ரீதியில் மொத்தம் 6,10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன இவர்களில் வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபா கொடுப்பனவைப் பெறுவதற்கு 4,93,000 குடும்பங்கள் தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தகுதியுடையவர்களில் இதுவரை 2,57,000 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக இதுவரை 6.4 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிவாரணத் திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 17.6 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஏனைய குடும்பங்களுக்கான கொடுப்பனவுகளை மிக விரைவில் முழுமையாக வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சபையில் மேலும் உறுதியளித்தார்.