அரச சேவையில் இருந்து விலகிய 23,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்!
2026 ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த வருடத்தில் இலங்கையின் அரச சேவையிலிருந்து 23,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விலகியுள்ளதாக உத்தியோகபூர்வ தரவு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் 2025 மற்றும் 2026 ஆளணி அறிக்கைகளுக்கு அமைய, 2026 ஜூன் 30 ஆம் திகதியளவில் அரச சேவையில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 893,797 ஆகும்.

ஒரு வருடத்திற்கு முன்னர் இப்பெறுமானம் 917,137 ஆகக் காணப்பட்டது. இதன் காரணமாக, ஒரே வருடத்திற்குள் வெற்றிடங்களின் எண்ணிக்கை 36,391 ஆல் அதிகரித்ததுடன், அங்கீகரிக்கப்பட்ட பதவிகளில் நிரப்பப்பட்டுள்ள பதவிகளின் சதவீதம் 82% இலிருந்து 79% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
அரச சேவையில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும், அதற்காகச் செலவிடப்படும் தொகை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.
மாகாண சபை ஊழியர்களையும் உள்ளடக்கியதாக அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் வேதனங்களுக்காகச் செலவிடப்படும் தொகை 2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 8.7% ஆல் அதிகரித்து 827 பில்லியன் ரூபாவாகக் காணப்படுவதாக திறைசேரியின் 2027 வரவு செலவுத் திட்ட பொருளாதார மற்றும் அரச நிதி நிலைமை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளை கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் இச்செலவு 760.7 பில்லியன் ரூபாவாக இருந்தது. ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட அரச துறைச் சம்பளத் திருத்தத்தின் இரண்டாம் கட்டமே இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனத் திறைசேரி குறிப்பிட்டுள்ளது.