எம்.பி ஒருவரிடமிருந்து நீதி அமைச்சருக்கு சென்ற கடிதம்!
அரசியலமைப்பின் 21ஆம் திருத்த சட்டத்தின் கீழ் உருவாக இருக்கும் அரசியல் அமைப்பு பேரவையில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் (Arunachalam Aravindakumar) வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு (Wijeyadasa Rajapakshe) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர், அதன் பிரதிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa), பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) உள்ளிட்டோருக்கும் அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதியினால் அரசியல் அமைப்பு பேரவைக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற முன்மொழிவு ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதில் ஜனாதிபதியினால் நான்கு பேரை நியமிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரையும், வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் பிரதிநிதி ஒருவரையும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரையும், முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒருவரையும் ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டும் எனவும், அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.