கிரிக்கெட் ரசிகர்களுக்கான மகா விருந்து ; 2026 டி20 அட்டவணை வெளியானது
ஐசிசி ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் எதிர்வரும் 2026 பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் கூட்டாக நடத்தும் இத்தொடர் 29 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், மொத்தம் 20 அணிகள் பங்குபற்றுகின்றன.
நடப்புச் சம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்கா அணியை மும்பையில் எதிர்கொள்கிறது.
தொடரின் முதல் நாளில் இந்தியா உட்பட மொத்தம் 6 அணிகள் களமிறங்கவுள்ளன. 'குழு A'-வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் (இந்தியாவில் 5 மற்றும் இலங்கையில் 3). ஆர். பிரேமதாச அரங்கம், SSC மைதானம், பல்லேகல சர்வதேச மைதானம். நரேந்திர மோடி மைதானம் (அஹமதாபாத்), சேப்பாக்கம் (சென்னை), அருண் ஜெட்லி மைதானம் (புது டெல்லி), வான்கடே (மும்பை), ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா).
பெப்ரவரி 7 முதல் 20 வரை மொத்தம் 40 போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெறும்.
சூப்பர் 8 போட்டிகள் பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும். அரையிறுதி போட்டிகள் கொல்கத்தா அல்லது கொழும்பு மற்றும் மும்பையில் நடைபெறும். இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் திகதி அஹமதாபாத் அல்லது கொழும்பில் நடைபெறும்.
2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள 20 அணிகளின் விபரம்,
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மே.இந்திய தீவுகள், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமிபியா, சிம்பாப்வே, நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்.