இந்த ஆண்டில் மட்டும் கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த 20 பெண்கள்! காரணத்தை வெளியிட்ட அதிகாரி
இந்த வருடத்தில் மட்டும் கொழும்பில் தமது கணவன்மாரை பயமுறுத்துவதற்காக உடலில் தீ வைத்துக் கொண்ட 20 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்கள் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உடலுக்கு தீ வைத்தவர்கள் பெண்களில் 19 பேர் 20 - 30 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பெண்கள் கணவன்மாரை பயமுறுத்த முயற்சித்துள்ளதாகவும் எனினும் அவர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் காணப்படவில்லை எனவும் அவர்களது மரண விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
உடலில் தீ வைத்துக் கொண்ட குறித்த பெண்கள் அனைவரும் தன்னை காப்பாற்றுமாறு அடுத்தவர்களிடம் உதவி கோரியுள்ளனர். 50 சதவீத எரிகாயம் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவது கடினமாகும்.
உயிரிழந்த அனைவரும் உயிரிழக்கும் இறுதி நொடி வரை சுய நினைவுடன் காணப்பட்டுள்ளனர். பொதுவாக உடலில் தீப்பிடிக்கும் போது தீயை அணைப்பது கடினம். தோலுக்கு அடியில் இருக்கும் எண்ணெய் படலம் தீக்கு நல்ல உதவியாக இருப்பதால், மரத்தை விட வேகமாக எரியும் என்பதால், தீயை அணைப்பது கடினம் என மரண விசாரணை அதிகாரி இரேஷா தெரிவித்தார்.
இதனால் மற்றவர்களை பயமுறுத்துவதற்கேனும் தீ வைத்துக் கொள்ள நினைக்க வேண்டாம் என என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.