பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 20 பேர் அதிரடியாக கைது
பம்பலப்பிட்டி காலி வீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் சென்ற 20 பேரை மோட்டார் சைக்கிள்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த ஒருவழிப்பாதையான இவற்றில் அதிக சத்தத்துடன் அதிவேகமாகவும், எதிர்திசையிலும் கூட கட்டுக்கடங்காத வகையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக மக்களிடம் இருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி, முன் சக்கரத்தை உயர்த்தி பின் சக்கரத்தில் மாத்திரம் பயணித்து ஏனைய சாரதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி இன்று (2024.05.05) அதிகாலை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த குழுவிற்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.