போலி கடவுச்சீட்டுடன் இலங்கை வந்த இருவர்; அதிகாரிகள் அதிரடி!
இலங்கைக்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைந்த காரணத்தால் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 21 மற்றும் 23 வயதுடைய ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஆவர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குவைத்துக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை
சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் தங்களது கஸகஸ்தான் கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இருவரும் சமர்ப்பித்த கடவுச்சீட்டுகள் குறித்து சந்தேகமடைந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கடவுச்சீட்டுகளை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, இந்த கடவுச்சீட்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்களின் பயணப்பொதிகளிலிருந்து ஆப்கானிஸ்தான் கடவுச்சீட்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்பதற்கு முயன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் குவைத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.