முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு ஒரு மில்லியன் டொலர் லஞ்சம்!
தனது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த பெண் ஒருவரின் கணவர் எனக்கு பல மில்லியன் டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வர்த்தகர் ஒருவர் கேள்விப்பத்திரத்தை பெற விரும்பினால் அவர் ஒரு மில்லியன் டொலருடன் எங்களிடம் வருவார். இந்த கேள்விப்பத்திரத்தை எனக்கு தாருங்கள் என வேண்டுகோள் விடுப்பார் .
பணத்துடன் சென்ற அமைச்சரின் கணவர்
நான் பிரதமராகயிருந்தவேளை எனது அலுவலகத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களுடன் வந்தார்கள்.அதனை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றேன்.
எனது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான பெண்ணொருவரின் கணவரே அவ்வாறு பெருந்தொகை பணத்துடன் வந்தார்.
அதோடு அவர்களை உடனடியாக அதனை எடுத்துக்கொண்டு வெளியே போகாவிட்டால் நான் உங்களை கைதுசெய்வேன் என எச்சரித்தேன் எனவும் அப்போது இந்த நபருடன் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரும் இருந்தார் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, கூறினார்.
ஊழல் மோசடியாளர்களால் நாட்டுக்கு ஆபத்து
அதேவேளை ஊழலுக்குப் பழக்கப்பட்ட மூத்தவர்களின் மனதை மாற்றுவது சாத்தியமில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எனவே சிறு வயதிலிருந்தே விழுமியங்களை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
உங்களால் முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள் என்று கூறும் ஒரு ஜனாதிபதி இங்கிருந்தார். அவர் தனது அமைச்சரவையிலும் தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி எம்.பி.க்களிடமும் கூறி வந்தார்.
எல்லோரும் திருடினார்கள், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த அமைப்புதான் எமது நாட்டை சீரழித்துள்ளது என பண்டாரநாயக்க மேலும் தெரிவித்தார்.
தொழிலதிபர்கள் தமது திட்டங்களைப் பாதுகாக்க லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால், பரவலான ஊழல் இறுதியில் தேசிய திவால் நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் எச்சரித்தார்.
நீங்கள் அந்த திட்டத்தை ஒருமுறை அல்லது இரண்டு முறை பெறலாம். ஆனால் அது முழு நாட்டின் நடைமுறையாக மாறும்போது, நாடு வங்குரோத்தடைந்து விடும் என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்தார்.