மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி வீட்டில் 19 ரிவோல்வர்; பொலிஸார் அதிரடி !
மரண தண்டனை விதிக்கப்பட்டு பூஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 'தெமட்டகொட சமின்த' என்பவருடைய குடும்பத்திற்குச் சொந்தமானது எனக் கூறப்படும் 19 ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கிகள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதை மாத்திரைகள் ஆகியவற்றைத் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், அந்த இடத்தில் இருந்த நான்கு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும், அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவருமான மரண தண்டனை கைதி தெமட்டகொட சமின்தவின் மகனும், தற்போது துபாயில் வசிப்பவருமான 'மலிஷ' என்பவருக்கே இந்தத் துப்பாக்கிகளும் போதை மாத்திரைகளும் சொந்தமானவை எனத் தெரியவந்துள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த இருமாடி வீட்டின் மேல் தளத்தைக் வாடகைக்கு எடுத்து, இந்தத் துப்பாக்கிகளையும் போதை மாத்திரைகளையும் அங்கு மறைத்து வைத்திருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.