17 மாவட்டங்கள் பாதிப்பு; 25 பேர் உயிரிழப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக 25 பேர் மரணித்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதோடு 76 மத்திய நிலையங்களில் 12 ஆயிரத்து 470 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, மரம் ஒன்று முறிந்து விழுந்ததனால் ரம்புக்கணை வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அதேபோல், கொழும்பு, குருநாகல் வீதியின் கொட்டதெனிய பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நீர்கொழும்பு, கிரியுல்ல வீதியும் நீரில் மூழ்கியுள்ளதனால் குறித்த வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தின் மோல்காவ, புளத்சிங்கள வீதியும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.