இலஞ்சம் கோரிய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, பேருந்து உரிமையாளரிடம் 20,000 ரூபாய் இலஞ்சம் கோரிய தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் நடமாடும் பரிசோதகர் ஒருவருக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நடமாடும் பரிசோதகராகப் பணியாற்றிய ரஞ்சித் கொட்டுபிட்டிய என்பவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்த நீதிபதி, அவர் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளிலும் அவரைக் குற்றவாளியாகக் கண்டுள்ளார்.

அத்துடன், அவருக்கு 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், எட்டு மாதங்கள் இலகு வேலைகளுடன் கூடிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2015 மார்ச் 18ஆம் திகதியன்று அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில், கொழும்பிலிருந்து பிபில நோக்கிப் பயணித்த அரை சொகுசு தனியார் பேருந்தில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 13 பயணிகள் அதிகமாக ஏற்றிச் செல்லப்பட்டிருந்தனர்.
இதன்போது, பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளைப் பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பரிசோதகர், குறித்த பேருந்துக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அதன் உரிமையாளரிடம் 20,000 ரூபாய் இலஞ்சம் கோரியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
சம்பவம் இடம்பெற்ற நாளில், கொழும்பிலிருந்து பிபில நோக்கிப் பயணித்த அரை சொகுசு தனியார் பேருந்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பரிசோதனைக் குழுவினர் இடைமறித்துப் பரிசோதித்துள்ளனர்.
இதன்போது, பேருந்தில் பல பயணிகள் நின்றுகொண்டு பயணித்தமை அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்துக்கு வழங்கப்பட்டிருந்த வீதிப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.
அந்தக் காலப்பகுதியில் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய குற்றவாளி, பின்னர் பேருந்து உரிமையாளரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 20,000 ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார்.
மேலும், கோரப்பட்ட பணம் அவருடன் பணியாற்றிய மற்றொரு நடமாடும் பரிசோதகரின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்தமையும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், குறித்த அதிகாரிக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.