15 வயது மாணவியை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை ; இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது
காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைகளின்படி, சிறுமி தனது பாட்டியுடன் கதிர்காமத்திற்கு பயணம் செய்துகொண்டிருந்தபோது பேருந்தில் சந்தேகநபரை சந்தித்துள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், சந்தேகநபர் சிறுமியை தலவாக்கலை நகரத்திற்கு அழைத்துச் சென்று, திம்புல பகுதியில் உள்ள குயிங்கிரி தோட்டத்தில் தனக்குச் சொந்தமான பாழடைந்த வீடொன்றிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்கு சிறுமியை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது மகள் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தந்தை தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி நன்னடத்தையின் அடிப்படையில் அவரது அத்தையின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.