செம்மணியில் மேலும் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 49ஆவது நாளான இன்று மேலும் 15 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் 11 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் செ. லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதுவரை செம்மணி மனித புதைகுழியில் மொத்தமாக 539 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 524 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 516ஆவது இலக்கமிடப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதியின் இடுப்புப் பகுதியில் இருந்து தாயத்து போன்ற பொருளொன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயமொன்றும் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.