பதுளையில் 137 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
பதுளையில் மூன்று பொது சுகாதாரப் பிரிவுகளில் இன்று (06) 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, பதுளை மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் சங்க உபதலைவர் சுப்ரமணியம் சுதர்ஷன் தெரிவித்தார்.
அப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவில் 53 பேரும், ஹல்துமுள்ளை பொது சுகாதாரப் பிரிவில் 47 பேரும், எல்ல பொது சுகாதாரப் பிரிவில் 17 பேருமாக 117 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்கள் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், பொது சுகாதாரப் பரிசோதகர் சங்க உப தலைவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பதுளையில் 48 வயதுடைய ஆசிரியை ஒருவர் இன்று (06) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், பதுளை மாவட்டத்தில் எட்டு தேர்தல் தொகுதியிலும் இதுவரை 137 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
ஏழாயிரம் பேருக்கு மேல் சுய தனிமைப்படுத்தப்பட்டுமுள்ளனர். பதுளை, பண்டாரவளை, வெலிமடை, தியத்தலாவை, ஹப்புத்தளை, ஊவா – பரணகம, பசறை ஆகிய அரசினர் மருத்துவமனைகளில் மேற்படி 137 மரணங்களும் சம்பவித்துள்ளன.
கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் வரிசையில், நாட்டின் நான்காவது இடத்தினை பதுளை மாவட்டம் வகிக்கின்றது.
அத்துடன் (06) இன்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சியும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.