பார்வை பெற்ற பின் பிரதமரை மஹிந்தவை சந்தித்த 13 வயது சிறுவன்
பிறப்பிலேயே பார்வையை இழந்த நிலையில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ச தலையீட்டினால் பார்வை பெற்ற கலென்பெந்துனுவெவ, பலுகொல்லாகம ஜீவந்த ரத்நாயக்க என்ற சிறுவன் இன்று அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார்.
13 வயதான ஜீவந்த ரத்நாயக்க சிறுவன் தனக்கு பார்வை வேண்டி சமூக வலைத்தளங்களில் எழுப்பிய குரல் ரோஹித ராஜபக்ச ஊடாக ஷிரந்தி ராஜபக்ஷ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து முதலில் சிறுவனை கொழும்பிற்கு அழைத்து நாட்டின் சிறந்த மற்றும் புகழ்பெற்ற கண் மருத்துவரிடம் அவரை சிகிச்சைக்காக அனுமதித்து, அச்சிறுவனுக்கு பல பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அப்பரிசோதனைகளுக்கமைய கண் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாது அச்சிறுவனின் ஒரு கண்ணில் பார்வை பெற முடியும் என்ற விசேட வைத்திய நிபுணரின் பரிந்துரைக்கமைய சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
சிகிச்சையின் பெறுபேறாக அச்சிறுவனுக்கு பார்வை தெரிய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் பிரதமரை சந்திப்பதற்காக வருகைத்தந்த சிறுவனின் தந்தை சுகதபால கருத்து தெரிவிக்கையில், எனது மகனுக்கு பிறப்பிலேயே பார்வை இல்லை.
அதனால் எனது மகன் மிகுந்த இன்னல்களுக்கு முகங்கொடுத்தார். எமது மகனின் கண் பார்வைக்காக சிகிச்சை அளிக்கும் அளவிற்கு எம்மிடம் வசதி இல்லை.
இவ்வாறான நிலையிலேயே திருமதி.ஷிரந்தி ராஜபக்ச அவர்கள் எனது மகனுக்கு சிகிச்சை அளிக்க உதவுவதற்கு முன்வந்தார். அவர் கொழும்பில் விசேட கண் வைத்திய நிபுணர் ஒருவரிடம் எனது மகனை சிகிச்சைக்கு அனுமதித்தார்.
கூறுவதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது எனது மகனுக்கு பார்வை கிடைத்துவிட்டது. சைக்கிள் ஓடுகிறார். புத்தகங்களை வாசிக்கிறார்.
 தற்போது அவர் தனது வேலைகளை தானே செய்துக் கொள்கிறார். எனது மகன் அனுராதபுரம் ரியன்சி அழகியவன்ன விசேட பாடசாலையில் கல்வி பயில்கிறார். இது மிகவும் உன்னதமான புண்ணிய காரியமாகும் என சுகதபால குறிப்பிட்டார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        