இலங்கையின் முக்கிய வங்கியில் 13.2 மில்லியன் மோசடி ; வாடிக்கையாளர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான NDB Bank-இல் சுமார் 13.2 பில்லியன் ரூபா மதிப்பிலான நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் செயல்பாட்டுப் பிரிவில் பணியாற்றிய சில ஊழியர்களின் திட்டமிட்ட கூட்டுச் சதியின் விளைவாக இந்த மோசடி நிகழ்ந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் காரணமாக 2026 மார்ச் காலாண்டிற்கான லாபத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், வாடிக்கையாளர்களின் வைப்புப் பணம் மற்றும் கணக்கு மீதிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
இதனுடன், வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 990 பில்லியன் ரூபாவாக இருப்பதால், அதன் நிதி நிலைத்தன்மைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், மத்திய வங்கி நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் வைப்புகள் முழுமையாக பாதுகாப்பாக உள்ளன என்பதையும் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் அறிவுறுத்தலின்படி, தற்காலிகமாக பணப்பங்கீடு (dividend payments) நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வங்கியின் பிற சேவைகள் வழமைபோல் எந்த தடையும் இன்றி முன்னெடுக்கப்படுகின்றன.
அதேவேளை, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், வங்கியின் உள்ளக கட்டுப்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.