தடுப்பூசி காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகயீனம்!
தடுப்பூசி காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகயீனமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 06 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட 11 பாடசாலை மாணவர்கள் தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் சுகயீனமுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஒவ்வாமை
குறித்த மாணவர்கள் இன்று மிஹிந்தலை வைத்தியசாலைக்கு சளி காரணமாக சிகிச்சை பெறச் சென்ற போது, அங்கு வழங்கப்பட்ட தடுப்பூசியொன்றின் ஒவ்வாமையினால் சுகவீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாணவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.