டித்வா புயலால் பெற்றோரை இழந்த 103 சிறுவர்கள்
நாட்டை தாக்கிய டித்வா புயல் காரணமாகத் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (6) நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினார்.

இளம் வயதில் கர்ப்பமடையும் யுவதிகளின் எண்ணிக்கை
இந்நிலையில் அந்தச் சிறுவர்களைப் பராமரிப்பதற்கும் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என அவர் கூறினார்.
பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பொறுப்பேற்கப் பலர் முன்வந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் இளம் வயதில் கர்ப்பமடையும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அத்தகைய நிலைமைகளை எதிர்கொள்பவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முறையான இடவசதிகள் இல்லை என்பதும் இங்கு தெரியவந்துள்ளது.
பதுளையில் புதிய போக்காக இணையவழி வன்முறைகள் அதிகரித்துள்ளதோடு, பெற்றோர்களால் பிள்ளைகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகும் மாவட்டமாகப் பதுளை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேசமயம் , இலங்கையில் அதிகளவான சிறுவர் குற்றங்கள் பொலன்னறுவையின் வெலிக்கந்தை பகுதியில் இடம்பெறுவதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் தெரிவித்தார்