சுவ செரிய சேவைக்கு மேலும் 100 அம்புலன்ஸ்கள் ; நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 1990 சுவ செரிய அவசர அம்புலன்ஸ் சேவைக்காக மேலும் 100 புதிய அம்புலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்கு இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் கையெழுத்திடுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி உதவி
இந்திய அரசாங்கத்தின் முழுமையான நிதி உதவியுடன் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவ செரிய அம்புலன்ஸ் சேவை, 2018 ஆம் ஆண்டில் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் இலவசமாக இயங்கி வரும் இச்சேவை மூலம் நாளொன்றுக்கு 1,000 முதல் 1,200 வரையிலான அவசர நோயாளர் போக்குவரத்து கோரிக்கைகள் கையாளப்பட்டு வருகின்றன.
இச்சேவையின் அம்புலன்ஸ்கள் ஆண்டுதோறும் சுமார் 90 இலட்சம் (9 மில்லியன்) கிலோமீற்றர் தூரம் பயணிக்கின்றன.
இதன் காரணமாக, தற்போது சேவையிலுள்ள 322 அம்புலன்ஸ்களில் அடிக்கடி இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இச்சவால்களுக்குத் தீர்வாக, அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 100 புதிய அவசர ஊர்திகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.