இலங்கையின் பொருளாதார மீள்கட்டமைப்புக்கு 100 மில்லியன் டொலர் ; அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கையில் தாங்குதிறனை அதிகரித்து, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் பேரண்ட மீள்கட்டமைப்பு துறைசார் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்த நிதி வசதி வேலைத்திட்டத்திற்கு இணையாக இலங்கையின் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, ஐந்து துணை வேலைத்திட்டங்களின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மொத்தம் 620 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனைப் பெறுவதற்கு, கடந்த மார்ச் 16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, குறித்த 100 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு கடந்த செப்டெம்பர் 7ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிரந்தர பொது மூலதன வளங்களின் கீழ் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனாகவும், ஏனைய 50 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுக் கடனாகவும் பெறப்படவுள்ளது.
குறித்த கடனைப் பெறுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் பேச்சுவார்த்தைகளை வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.