பெண்கள் தன் வாழ்நாளை நீட்டிக்க தவறாமல் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்
அதிகளவில் பெண்களின் இறப்புக்கு கார்டியோவாஸ்குலர் நோய்கள் தான் முக்கிய காரணமாக அமைகின்றன, இறக்கும் 4 பேரில் ஒருவர் இந்த நோயால் தான் இறக்கின்றனர்.
அதிகளவில் ஆண்கள் தான் இதய நோய்க்கு ஆளாவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம், ஆனால் தற்போது பெண்களும் இதய நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அதிலும் குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்கள், நீரிழிவு நோயுள்ள பெண்கள் அல்லது அதிக எடைகொண்ட பெண்கள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
கரோனரி அல்லது குருதியூட்டக்குறை இதய நோய் போன்றவை மரபு வழியாக பரம்பரை வாரியாக தாக்கக்கூடிய ஒரு இதய நோயாகும். ஏற்கனேவே ஒருவரது பரம்பரையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட நபர் யாரேனும் இருந்தாலும் அது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.
சில வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் உங்களை இதய நோய் தாக்காமல் பாதுகாத்து கொள்ளலாம். இந்த வழிமுறைகள் உங்கள் வயது, புகைபிடித்தல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஹைபர்கொலஸ்டிரோலீமியா போன்றவற்றின் அளவை கண்காணிக்கிறது.

இதய நோய் அண்டாமல் இருக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து இங்கே பார்க்கலாம்.
உங்கள் எண்களை அறிந்து கொள்ள வேண்டும்:
உடல் எடை மற்றும் இடுப்பு சுற்றளவு எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் இரத்த அழுத்த அளவு, சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவை இயல்பான அளவை விட அதிகமாக இருந்தால் அதனை சரியான அளவிற்கு கொண்டு வர நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
உடல் பயிற்சி செய்தல்:
ஒவ்வொரு வாரமும் 150 நிமிட மிதமான ஏரோபிக் உடற்பயிற்சியையும், 75 நிமிட தீவிர ஏரோபிக் உடற்பயிற்சியையும் பெண்கள் செய்ய வேண்டும். சராசரியாக வாரத்திற்கு ஐந்து நாட்கள் குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதில் வேகமான நடை, ஓடுதல் , நீச்சல், நடனம் ஆகியவை அடங்கும்.

ஆரோக்கியமான உணவு வேண்டும்:
இதயம் ஆரோக்கியமாக இருக்க குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த உப்பு உள்ள உணவுகளை உண்ண வேண்டும். மேலும் அதிகளவில் நார்ச்சத்து பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். கொழுப்புகள், சர்க்கரைப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்கவும்.

எடையை குறைத்தல்:
இதய நோய் வருவதற்கு அதிக எடை அல்லது பருமனாக இருப்பது ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. பெண்களின் பிஎம்ஐ 25 க்கு மேல் அல்லது இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்திற்கு மேல் இருந்தால் அவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகமுண்டு.
உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைக்க வேண்டும்.

புகைபிடிப்பதை தவிர்க்கவும்:
பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக சில தகவல்கள் கூறுகிறது. ஆண்களை விட குறைந்த அளவில் பெண்கள் புகைபிடிகின்றனர் என்றாலும் இது உடல்நலத்திற்கு தீங்கான ஒன்று. சாதாரண பெண்களை விட புகைபிடிக்கும் பெண்கள் 14.5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விடுகின்றனர்.

புகைபிடிக்கும் பெண்களுக்கு அதிகளவில் இதய நோய் வருகிறது.
கருத்தடை மாத்திரைகள்:
ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி இதயத்திற்கு பாதுகாப்பானது என்றாலும், மாதவிடாய் நின்ற பின் வெளியில் கொடுக்கப்படும் ஈஸ்ட்ரோஜனானது இதயத்திற்கு நல்லதல்ல. இவை இதய நோய் மற்றும் இரத்த உறைவு ஆபத்தை அதிகரிக்கிறது.

மன அழுத்தம்:
தற்போது ஆண், பெண் இருபாலருக்கும் மன அழுத்தம் என்பது மிகுதியாகவே இருக்கிறது, அதிலும் குறிப்பாக பெண்களை அதிகளவில் மன அழுத்தம் தாக்குகிறது. மன அழுத்தமானது பலவேறு நோய்க்காரணிகளுக்கு திறவுகோலாக அமைகிறது, இதனால் அதிகளவில் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வருகிறது. மன அழுத்தத்தை போக்க தினமும் யோகா செய்தல், நல்ல தூக்கம், சிறந்த பொழுதுபோக்கை ஏற்படுத்தி கொள்ளுதல் போன்றவற்றை செய்யலாம்.

சர்க்காடியன் ரிதம்:
போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு இதயத்திற்கு நன்மையை அளிக்கும். போதிய தூக்கமின்மையால் இரத்த அழுத்தம் அதிகரித்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. மேலும் இரவு 9:00 மணிக்குப் பிறகு மொபைல், டிவி, கணினி இவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

இதய மருந்துகள்:
இதய நோயாளியாகவோ அல்லது சர்க்கரை நோயாளியாகவோ, அதிக பிபி அல்லது அதிக கொழுப்பு உள்ளவர்களாகவோ இருப்பவர்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் தினசரி மாத்திரைகளை உட்கொள்ளுவார்கள், இவற்றை தவறாமல் உண்ணவேண்டும். ஏனெனில் இந்த மருந்துகளில் சில உங்கள் மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கின்றன மற்றும் சில சமயங்களில் உங்கள் வாழ்நாட்களையும் நீடிப்பதாக உள்ளன.