திருச்சி சிறப்பு முகாமில் 10 இலங்கையர்கள் தற்கொலை முயற்சி!
திருச்சி சிறப்பு முகாமில் இலங்கையர்கள் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில், கைதிகளுக்கான சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. அங்கு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட 120 உள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த அகதிகள் உள்ளதுடன் அந்த சிறப்பு முகாமில் சுமார் 80 இலங்கை தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் தங்களை பொய் வழக்கில் தமிழக பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அந்த வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் தங்களை அகதிகள் முகாமில் அடைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே சட்டப்படி விடுதலை செய்ய வேண்டும் என்றும், தாங்கள் இந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கருணை கொலை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து 10 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டனர்.
எஞ்சியவர்கள் விடுதலை செய்யப்படாமல் சிறப்பு முகாமில் உள்ள நிலையில் இலங்கை தமிழர்கள் 10 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் ரமணன் என்பவர் வயிற்றை கத்தியால் கீறியும், நிப்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், மற்றும் சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டும், மரத்தின் மீது எறியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.