மூதாட்டியை தாக்கி 10 பவுண் தாலி வழிப்பறி!
அச்சுவேலி, வல்லை சந்தி பகுதியில் இன்று மதியம் நடத்தப்பட்ட வழிப்பறிக் கொள்ளைச் சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்டு, அவரின் 10 பவுண் தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துணிகரமான வழிப்பறி கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உறவினர் ஒருவருடன் நவாலி பகுதியில் இருந்து புலோலி நோக்கி சென்று கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி விழுத்தி, கொள்ளையர்கள் தாலியை அபகரித்து சென்றுள்ளனர்.
காயமடைந்த மூதாட்டி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வல்லை பகுதியில் வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன.
கடந்த ஒரு வாரத்துக்குள் 4 வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இராணுவத்தினர் வீதியில் இறங்கி இவ்வாறான வழிப்பறிக் கொள்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
தற்காலத்தில் இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ள நிலையில் கொலை, கொள்ளை என்பதன் பாரதூரம் கூட தெரியாத நிலையில் தற்போது மாறி வருகின்றனர்.
மாறாக அரசியல்வாதிகளின் இராணுவ மயமாக்கல் என்ற மாயை விட்டு , வல்லை பகுதியில் இராணுவ காவலரண்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தகக்து.