இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,600 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டது
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1600 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூடைகள் இன்று (14) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் கடல் அட்டை, கஞ்சா, சமையல் மஞ்சள், சுக்கு, பீடி இலை பண்டல்கள், வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
திடீர் சோதனை
இதனை தடுப்பதற்காக இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இலங்கை இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பகுதிகளில் மரைன் பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை மீனவர் கிராமத்தில் இருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள் மூட்டைகள் கடத்த இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மரைன் பொலிஸார் வேதாளை கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பூட்டி இருந்த வீட்டில் இருந்து சமையல் மஞ்சள் வாசனை அதிக அளவு வந்ததால் வீட்டை உடைத்து சோதனை செய்தபோது வீட்டில் 40 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 1,600 கிலோ எடையுள்ள சமையல் மஞ்சள் மூட்டைகள் இலங்கை கடத்துவதற்காக பதுக்கி இருந்தது தெரியவந்ததையடுத்து கைப்பற்றல் செய்த மரைன் பொலிஸார் வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைப்பற்றல் செய்யப்பட்ட சமையல் மஞ்சள் இந்திய மதிப்பு 2 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும், வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரித்து வருவதுடன், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மரைன் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.