தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 08 இலங்கை மீனவர்கள்!
இந்திய கடலோர காவல் படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 08 இலங்கை மீனவர்கள் நான்கு படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் படகுகளுடன் மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு மண்டபம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காற்றின் வேகம் காரணமாக திசை மாறி 08 மீனவர்களும் இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க வந்ததாக விசாரணைகளின் போது தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில் மேற்கொண்ட நடவடிக்கையில் இலங்கைக்கு கடல் அட்டை மற்றும் சமையல் மஞ்சள் கடத்திய மண்டபத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் கடத்தல் தங்கத்தை மண்டபத்தை சேர்ந்தவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து சமையல் மஞ்சள் மற்றும் கடல் அட்டை வாங்கி செல்ல நடுக்கடலில் காத்திருந்த போது பிடிப்பட்டனரா? என்ற கோணத்தில் இந்திய மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடாத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.