தனியார் பேருந்து நிலையத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞர்
ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் கூரிய ஆயுதத்தால் பயணியின் கழுத்தில் தாக்கிய சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம்
ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் பின்புறம் சந்தேக நபர் ஒருவர் பயணியின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இரத்தம் அதிகமாக வெளியேறியதன் காரணமாகக் காயமடைந்த நபர் முச்சக்கர வண்டியில் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த நபரின் நிலைமை மோசமாடைந்ததால் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர், தன்னை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய நபரை தனக்குத் தெரியாது என்றும், எதற்காகத் தாக்கினார் என்றும் தெரியவில்லை என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த நபர் டிக்கோயா, லெதண்டி தோட்டத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் என்றும், காயமடைந்த நபர் வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.