போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது
தனியார் வங்கியொன்றின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஒத்த போலி இணையத்தளமொன்றை உருவாக்கி, நபரொருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாரியப்பொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

போலி இணையத்தளம்
குறித்த வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளமூடாக நபரொருவரை ஏமாற்றி, அவரது வங்கிக் கணக்கிற்கான உள்நுழைவுத் தரவுகளைப் பெற்று, கணக்கிலிருந்த 1,000,000 ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இம்மோசடியுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் தனியார் நிறுவனமொன்றின் தரவு உள்ளீட்டு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.